Friday, October 17, 2008

ஒரு மழைத்துளியின் கனவு!

முத்தாய் மாறிடுங் கனவை சுமந்து
மழைத் துளியாய் ஜென்ம மேடுத்தேன்
கார் மேகத்தி னின்று விடுபட்டு
பெருங் கடலினில் சிப்பியைத் தேடிப்பிடித்து
சூழுகிற துளிகளை யெல்லாம் ஓரங்கட்டி
வருகைக் காய்காத் திருக்கும் இதழ்நோக்கி
இலக்கினை தொடுகிற அரைநொடி முன்னே
காற்றெனும் அம்பு மார்பினில் பாய்ந்து
பெருங்காயத் துடனே கடலினுள் வீழ்ந்தேன்

மாண்டு போனமழைத் துளிக ளெல்லாம்
பிணமாகி நன்னீர் உப்பாய் ஆகியது
தோற்றுப் போனதால் மனம் துவண்டு
சவக் கிடங்கில் வீழ்ந்து கிடக்காமல்
மீண்டு மீண்டும் முத்தாய் பிறக்க
நெருப்பை யுண்டு ஆவி ஆகி
மெல்லமெல்ல மேலேறி ஆகாயம் அடைந்து
மேகத்தின் வியர்வை சுரப்பிக்குள் நுழைந்தேன்

பரந்த ஆகாய குடிலி னுள்ளே
குளிர்ந்த காற்று இதமாய் தழுவ
ஆண் மேகமும் பெண் மேகமும்
காதல் கொண்டுக் கட்டிப் புரள
வியர்வை சுரப்பியி லிருந்து விடுபட்டு
மழையாய் மாறிய துளியி லொன்றாய்
மேகத்தை விட்டு பயண மானேன்

தலைவிதி என்னை அலைக் கழிக்க
மலை சரிவில் துளியாய் நான்வீழ்ந்தேன்
மிகநீண்ட முயற்சி பலன் கொடுக்க
துளிகளை சேர்த்து அருவியாய் மாறி
காடுமேடு பள்ள மெல்லாம் கடந்து
மறுபடி பெருங்கடல் அடைத்து விட்டேன்

முத்தாய் மாறிடுங் கனவை சுமந்து
பிறிதோர் பயணத்திற் குத்தயா ராகிறேன்

No comments: