வனப்பு மிகுந்த ஆறிது - போகும்
வழியெல்லாம் பசுமைதந்த ஆறிது
மீனுக்கு வீடாயான ஆறிது - நாவறண்ட
செடிகொடியின் தாகம்தீர்த்த ஆறிது
உடல்கள் கறைபோக்கிய ஆறிது - உடுத்தும்
உடுப்புகளை வெள்ளையாக்கிய ஆறிது
அருமருந்தை சுமந்துவரும் ஆறிது - சாறுகொண்டு
உயிர்கள் பிணிநீக்கும் ஆறிது
தண்ணீரால் நிரம்பிய ஆறிது - உழவன்
வியர்வையைப் பயிராக்கிய ஆறிது
நிற்காமல் செல்லுகின்ற ஆறிது - அழுக்கை
வடிகட்டி நல்லூற்றாகிய ஆறிது
விளையாட்டு திடலாகிய ஆறிது - சிறுவர்
மீன்களோடு நீந்திபழகிய ஆறிது
ஓடம்செல்ல பாதைதந்த ஆறிது - ஓடம்போல
வாழ்க்கையென பாடம்சொன்ன ஆறிது
வற்றாமல் பயணித்த ஆறிது - இன்று
நீரின்றி புல்முளைத்து போனது
வறியோர்க்கும் சொந்தமான ஆறிது - இன்று
குள்ளநரிகளின் கைப்பிடிக்குள் போனது
அணைக்குள் கைதாகிய ஆறிது - குடிசைகளை
அடியோடு மறந்துவிட்ட ஆறிது
பட்டணம் பார்க்கப்போன ஆறிது - நகருக்குள்
புட்டியில் வலம்வரும் ஆறிது
பாலையைச் சோலையாக்கிய ஆறிது - ஆக்கிய
சோலையை பாலையுமாக்கிய ஆறிது
சுவடின்றி காணாமற்போன ஆறிது - ஏழையின்
சிரிப்பையுங் காணாமலாக்கிய ஆறிது
No comments:
Post a Comment