Tuesday, November 11, 2008

பொக்கைவாய் சிரிப்பு!

மழலையின் முதல்நடையில் தாய்கொண்ட சிரிப்பு
தேர்வினில் வெற்றிபெற்ற மாணவனின் சிரிப்பு
அழகுராணி பட்டம்பெற்ற அழகியின் சிரிப்பு
காதலியின் முதல்முத்தத்தில் அவன்பூத்த சிரிப்பு...
அத்தனை சிரிப்பிற்கும் சற்றும் சளைக்கவில்லை
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!

சிரிப்பையுங் காசாக்கும் நடிகனின் சிரிப்பு
குருவிற்கு பயந்த மாணவனின் சிரிப்பு
உழைப்பாளி உயிர்பிழியும் முதலாளியின் சிரிப்பு
ஒட்டுபெற வாக்களிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பு...
அத்தனை சிரிப்பினையும் போலியாய் ஆக்கியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!

சுருங்கிய கண்இமைகளும் தோலில்லா நரம்புகளும்
தளர்ந்த நடையும் கூனியத் தோள்களும்
தெளிவில்லா குரலும் பல்லில்லா வாயும்
கிழவனை அருவருப்பாய் காட்டும் அடையாளங்கள்...
அத்தனை அடையாளங்களையும் அழகாய் காட்டியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!

வயதெனும் பள்ளத்திலே காமமெனும் தண்ணீரிலே
குளிக்கையிலே உடலன்றி தெரியவில்லை
வயோதிக மேட்டினின்று காதலியைப் பார்கையிலே
உடலிச்சை இல்லாமல் மனமொன்றே தெரியும்
உடல்தாண்டி உணர்வுகளை ஆராதிக்கும்
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சிறிதும் கள்ளம் கபடம் இல்லாதது!
குழந்தையின் சிரிப்பைபோல தீங்கிலாதது!

எதிர்பார்ப்பு ஏதுமில்லை ஏமாற்றும் எண்ணமில்லை
தானென்ற அகந்தையில்லை சுயநலம் சிறிதுமில்லை
அனுபவித்த வாழ்கையில் இன்னும்பெற ஆசையில்லை
நல்லதையே சிந்திக்கும் நல்லதையே போதிக்கும்
அனுபவத்தால் நிரம்பிய கிழவன் சிரிப்பில்
தீமையின் அறிகுறிகள் அணுகூட இருப்பதில்லை.

No comments: